ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்ட விவகாரம் – போலீஸ் குவிப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி தச்சங்குறிச்சியில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை. ஆன்லைன் மூலம் டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என கூறி இருந்த நிலையில் விழாக்குழுவினரே 600 டோக்கன் வரை காளைகளுக்காக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் அரசின் விதிமுறைப்படி கொரோனா விற்கான ஆர்டிபிசிஆர் சோதனை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் , முன்னேற்பாடு பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே இன்று ஜல்லிக்கட்டு நடத்த ஆட்சியர் அனுமதி வழங்க முடியாது என்று கூறினார். மாற்று தேதிகளில் நடத்தவும் விழா கமிட்டியினருக்கு அறிவுறுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விழா கமிட்டியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தச்சங்குறிச்சி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
newstm.in