டாஸ்மாக் நேரத்தில் மாற்றம்!?
மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி 8 மணி வரை மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மதுவின் விலை பட்டியல்கள் தமிழில் அச்சடிக்க வேண்டும். பள்ளி மாணவ மற்றும் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மது அருந்துபவர்களால் சமூகத்தின் கட்டமைப்பே பாதிக்கப்படுகிறது, மது அருந்துபவர்களால் தனி மனிதன், அவர்களது குடும்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
தற்போதைய சூழலில் இளம் தலைமுறையினர் அதிகமாக மதுவிற்கு அடிமையாகியுள்ளனர் என்று கூறிய நீதிபதிகள், மதுபானம் வாங்க, விற்க, உபயோகப்படுத்த உரிய உரிமம் வழங்கப்பட வேண்டும் என விதிமுறைகளை உருவாக்க பரிந்துரைத்தனர்.
மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், மது விற்பனை விலைப்பட்டியல் மற்றும் மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகளை குறித்து தமிழில் அச்சிடப்பட வேண்டும் என்றனர்.
மதுபான கடைகளில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
முக்கியமாக மக்களின் நலன் கருதி மதுபான விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
newstm.in