ஆதார் அட்டையில் முகவரி மாற்ற இந்த சான்று தேவையில்லை..!
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கு இனி ஆதார சான்றிதழ் வழங்கத் தேவையில்லை. பெற்றோர், குழந்தைகள், வாழ்க்கைத் துணை என யாராக இருந்தாலும் குடும்பத் தலைவரின் ஒப்புதல் மட்டும் இருந்தால் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
ஆதார் அடையாள அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) குடும்பத் தலைவர் என்ற முறையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முகவரி உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளதாக மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆதாரில் ஏற்கெனவே இருப்பிடச் சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, குடும்பத் தலைவர் (ஹெச்ஓஎஃப் - ஹெட் ஆஃப் தி பேஃமிலி) முறை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் குடும்பத் தலைவராக பதிவு செய்து கொள்ளலாம். ஹெச்ஓஎஃப் தனது முகவரியை மற்ற குடும்ப உறுப்பினர்களான மனைவி, தந்தை, தாய், மகன்கள் / மகள்கள் மற்றும் உடன் பிறந்தவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்.