ஆதாரை போல் தமிழ்நாட்டு மக்களுக்கு தனி ஐ.டி..?
இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. இந்திய குடிமக்களுக்கு ஒன்றிய அரசு மூலம் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. ஆதார் தனி நபர் அடையாள அட்டையாகும். வங்கி கணக்கு, மொபைல் சிம், பான் கார்டு, ரேஷன் கார்டு என அனைத்திலும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் இல்லாமல் எந்த ஒரு நலத்திட்டங்களையும் நாம் பெற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
அதே போல தற்போது தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் உள்ள மக்கள் ஐடி தமிழ்நாடு அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்கள் ஐடி சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி எண் பெரிதும் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான பணியை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்யவுள்ளது. இதில் அனைத்து துறைகளின் தரவுகளையும் ஒருங்கிணைந்து இந்தத் தரவு தளம் உருவாக்கப்படவுள்ளது. இதன்படி பொது விநியோம், முதல்வர் காப்பீட்டு திட்டம், வருவாய், கல்வி, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், கருவூலம், சுகாதாரம் பல்வேறு துறைகளிடம் உள்ள தரவுகளை ஒருங்கிணைந்த இந்தத் தரவுத் தளவு உருவாக்கப்படவுள்ளது.
இந்த தரவுத் தளவு தயார் செய்வதற்கான டெண்டரை மின் ஆளுமை முகமை கோரியுள்ளது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.