நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - பொருளாதார நிபுணர்கள் கவலை.!!
ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய தொழில்களை உருவாக்கி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஒன்றிய அரசு உருவாக்கவில்லை என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நாட்டின் வேலையின்மை அதிகரித்துள்ளதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் மகேஷ் வியாஸ், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், ‘நாட்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை.
கடந்த மார்ச் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 10.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கிராமப்புற வேலையின்மை விகிதம் 8.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது முந்தைய எண்ணிக்கையை விட 7.6 சதவீதமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக வேலையின்மை அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது’ என்று ெதரிவித்துள்ளார். மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு 2014ம் ஆண்டு முதல் படிப்படியாக குறைத்து வருகிறது. மறுபுறம், ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘2014ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, ஒன்றிய அரசின் நிறுவனங்களில் 13.51 லட்சம் நிரந்தர ஊழியர்களும், 3.08 லட்சம் ஒப்பந்த ஊழியர்களும் இருந்தனர். 2022ம் ஆண்டில் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை 9.22 லட்சமாகக் குறைந்துள்ளது. ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை 4.99 லட்சமாக உயர்ந்துள்ளது.
சேமிப்பு மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறினார். கடந்த 2014ம் ஆண்டில் மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றதன் மூலம் ரூ.4.04 லட்சம் கோடியை ஒன்றிய அரசு திரட்டியுள்ளது. இந்த விவரங்களை நிதி அமைச்சகமே வெளியிட்டது. இதில், 59 நிறுவனங்களின் பங்குகளை ஆஃபர்-ஃபார்-சேல் (ஓ.எஃப்.எஸ்) மூலம் ரூ .1.07 லட்சம் கோடியும், எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்ட்கள் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 10 கட்டங்களில் விற்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ.98,949 கோடியும் ஈட்டியுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு பலவீனப்படுத்தி வரும் நிலையில், நாட்டின் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
A