1. Home
  2. தமிழ்நாடு

கெட்டது பேசினால்தான் பணம் வருகிறது: நடிகர் விஜய் சேதுபதி ஆதங்கம்..!

கெட்டது பேசினால்தான் பணம் வருகிறது: நடிகர் விஜய் சேதுபதி ஆதங்கம்..!

எந்தவொரு திரைப்படத்தையும் விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள். அது நல்லதல்ல. விமர்சகர்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை. இப்போதெல்லாம் யூடியூப்பில் கெட்டது பேசினால்தான் பணம் வருகிறது என, நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

சென்னையில் கடந்த 15-ம் தேதி 20வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. சென்னை பிவிஆா் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், அண்ணா சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன. இந்நிலையில், இந்த விழாவின் நிறைவு விழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.


இதில் பல்வேறு திரைக்கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ‘மாமனிதன்’ திரைப்படத்திற்காக, சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. இதன்போது பேசிய நடிகர் விஜய்சேதுபதி, “திரைப்படங்களை பார்த்துவிட்டு கடந்து போய் விடாமல் இயக்குநர்கள் கதையின் வாயிலாக தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள்.

ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள். வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாகின்றன. முடிந்த அளவு ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். வாழ்க்கையை புரிந்துகொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன. எந்தவொரு திரைப்படத்தையும் விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள். அது நல்லதல்ல.


இப்போதெல்லாம் யூடியூப்பில் கெட்டது பேசினால்தான் பணம் வருகிறது. விமர்சகர்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை. நடிகர் பூ ராமு அவர்களுடன் இணைந்து இந்த விருதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார். மேலும் அவர், விருதுக்கான பரிசுத்தொகையை விழாக் கமிட்டிக்கு நன்கொடையாக திருப்பி வழங்கினார்.

Trending News

Latest News

You May Like