பணிச்சுமையால் மன உளைச்சல்: விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை..!
புதுச்சேரியில், பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த டாக்டர் தனக்கு தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி மூலக்குளம் எல்லைப்பிள்ளை சாவடி தந்தை பெரியார் நகர் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த டாக்டர் விஜய் ஆனந்த். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் விஜய் ஆனந்த் டாக்டராக பணிபுரிந்து வந்தார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் அவரது மனைவியும், மகனும் புதுச்சேரிக்கு வந்தனர்.
அதற்கு பிறகு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விஜய் ஆனந்த் புதுச்சேரிக்கு வந்தார். அப்போது அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததால் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மனைவி, மகனுடன் சவுதி அரேபியாவுக்கு திரும்ப வேலைக்குச் சென்றார்.
அங்கு சென்ற பிறகு விஜய் ஆனந்த் சரிவர மாத்திரை எடுக்காததால் மீண்டும் அதிகமாக மன உளைச்சல் ஏற்பட்டு குடும்பத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுச்சேரிக்கு வந்தனர். அதற்கு பிறகு கனக செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், விஜய் ஆனந்துக்கு மன அழுத்தம் மேலும் அதிகமானதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவரது மனைவி வேலைக்கு சென்று வந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஆனந்த் திடீரென படுக்கையில் மயங்கிய நிலையில் சாய்ந்து கிடந்தார். அவரது அருகில் ஊசி செலுத்திய நிலையில் மருந்து பாட்டில் கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது மனைவி ரேவதி விரைந்து வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் விஜய் ஆனந்தை சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் ரேவதி புகார் செய்தார். புகாரில் தனது கணவர் விஜய் ஆனந்த் பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.