சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடக்கூடாது: ஆவடி கமிஷனர் அதிரடி உத்தரவு..!
பணி நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது. சமூக வலைதளங்களில் யாரும் தேவை இல்லாமல் கருத்து பதிவிட வேண்டாம் என ஆவடி போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பன்சத்திரம் அருகே பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதற்கும், வாகனங்களை கண்காணிப்பதற்கும் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர், அங்கிருந்த போலீசார் மத்தியில் பேசியதாவது; "பணி நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது. பணி நேரம் முடிந்த பிறகுதான் செல்போனை பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் யாரும் தேவை இல்லாமல் கருத்து பதிவிட வேண்டாம்.
அரசாங்கம் தான் நமக்கு சம்பளம் கொடுக்கிறது. எனவே, அரசாங்க வேலையை மட்டும்தான் பார்க்க வேண்டும். பணி நேரத்தில் வேலையை மட்டும் செய்ய வேண்டும். ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, மதுவிலக்கு போலீசார் என 3 பிரிவையும் இணைத்து புறக்காவல் நிலையங்கள் அமைக்க உள்ளது. இதனால் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வருவது சோதனை செய்யப்பட்டு முற்றிலும் தடுக்கப்படும். செயல்படாத புறக்காவல் நிலையங்களையும் விரைந்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் பேசினார்.