மாண்டஸ் புயல் நிவாரணம் எப்போது? – முதல்வர் அறிவிப்பு!!
புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்ற முதலமைச்சர், சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டார். அங்குள்ள மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டுள்ளதாகவும், புயல் பாதிப்பு சீரமைப்பு பணியில் 25,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பெருமழை பெய்த போதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று முதலமைச்சர் கூறினார். மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 98 கால்நடைகள் இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சென்னையில் 400 மரங்கள் சாய்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றார். மேலும், புயல் பாதிப்பு குறித்த சேதம் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
newstm.in