நிச்சயதார்த்த தேதி தாமதம்.. விரக்தியில் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை..!
நிச்சயதார்த்த தேதி தாமதமானதால் விரக்தி அடைந்த பட்டதாரி இளம்பெண் வீட்டு பூஜை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த நிரவி நாகத்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி உஷா. இந்தத் தம்பதியின் மகள் உமா மகேஸ்வரி (21). இவர், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், உமா மகேஸ்வரிக்கும், திருவாரூரில் உள்ள உறவினர் கலியபெருமாள் மகன் சதீஷ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பெண்ணின் தந்தை கந்தவேல், உறவினரிடம் திருமணம் குறித்து பேசியபோது, சதீசுக்கு மூத்தவர்கள் 2 பேர் இருப்பதால் முதலில் திருமணம் செய்துவைக்க யோசித்தனர்.
நிச்சயதார்த்த தேதி குறித்து மாப்பிள்ளை வீட்டார் தாமதப்படுத்தி வந்த வேதனையில் இருந்த உமா மகேஸ்வரி, வீட்டு பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நிரவி போலீசார், உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.