பெயர் மாறுகிறதா தாமிரபரணி..?: அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!

பெயர் மாறுகிறதா தாமிரபரணி..?: அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!
X

தாமிரபரணி ஆற்றின் பெயரை, பொருநை ஆறு என மாற்றம் செய்யக்கோரிய மனு மீது 12 வாரங்களில் உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.எம்.ஏ.காந்திமதி நாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி, பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது.


தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். இதன் தமிழ் பெயர் பொருநை நதியாகும். திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல தமிழ் இலக்கியங்களில் தாமிரபரணி பொருநை நதி என்றே அழைக்கப்படுகிறது.

இதனை பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்கள், தமிழறிஞர்கள் உறுதி படுத்தியுள்ளனர். கி.பி.1011-ம் ஆண்டில் பொறிக்கப்பட்ட முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டிலும் பொருநை நதி என்றே உள்ளது. இதனால், தாமிரபரணி நதியின் பெயரை பொருநை நதி என மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.


இந்தநிலையில், தாமிரபரணி ஆற்றின் பெயரை, பொருநை ஆறு என மாற்றம் செய்யக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், 12 வாரங்களில் உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story
Share it