பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்த நீதிபதி: வீடியோவை தடை செய்ய ஐகோர்ட் உத்தரவு..!
தனது அறையில் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ளும் நீதிபதி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என, டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி கோர்ட் நீதிபதி ஒருவர் தனது அறையில் சக பெண் ஊழியருடன் தவறாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த காட்சிகளை தடுக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மனுதாரரின் அடையாளத்தை மறைக்க கோர்ட் அனுமதித்ததால், இந்த வழக்கை தாக்கல் செய்தது யார் என்பது தெரியவில்லை.
இதனிடையே, அந்த வீடியோவை தடுக்கக் கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா நேற்று விசாரித்தார். அப்போது, "வீடியோவில் பாலியல் தன்மை மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் தனியுரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்த வீடியோவை பரப்புவதை நிறுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
மேலும், இது தொடர்பாக அனைத்து ஆன்லைன் செய்திகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அறையில் பாலியல் நோக்கத்துடன் தகாத முறையில் நடந்து கொண்ட நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இந்த வழக்கை டிசம்பர் 9-ம் தேதி டெல்லி ஐகோர்ட் விசாரிக்கவுள்ளது.