புத்தூர் கட்டு வைத்தியச்சாலையால் ஒரு காலை இழந்து நிற்கும் சென்னை இளைஞர்..!!
சென்னையை சேர்ந்தவர் விஜய். பெயிண்டரான இவருக்கு வேளாங்கன்னி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் பார்க்கில் தனது குழந்தையை விளையாட அழைத்து சென்ற போது, தவறி கீழே விழுந்து விஜயின் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே விஜய் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் கட்டு போட வேண்டும் கூறியுள்ளனர். பின்னர் நண்பரின் மூலமாக வடபழனியில் உள்ள புத்தூர் கட்டு வைத்தியசாலைக்கு சென்ற விஜய்க்கு, 4 கட்டுக்கள் போட்டால் சரியாகிவிடும் என வைத்தியசாலையில் தெரிவித்ததை நம்பி பணம் அளித்து கட்டுப்போட்டு சென்றுள்ளார். இரண்டாவது முறை கட்டுப்போட்டு சென்ற விஜய்க்கு தொடர்ந்து காலில் ரத்தம் கசிந்ததால், அச்சமடைந்து வைத்தியசாலையின் உரிமையாளர் சிவசாமி வேலுமணியிடம் இது குறித்து தெரிவித்த போது, அட்மிட் ஆகி சிகிச்சை பெறுமாறு தெரிவித்துள்ளார். ஒரு மாதமாகியும் விஜயின் காலில் ஏற்பட்ட எழும்பு முறிவு சரி ஆகாமல் இருந்ததால் சந்தேகமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது விஜய்க்கு கால் அழுகி இருப்பதால் உடனடியாக காலை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிர்ந்து போன விஜயின் மனைவி வேளாங்கன்னி வேறு வழியில்லாமல் விஜயின் காலை அகற்றி உள்ளார்.
இந்த நிலையில் புத்தூர்கட்டு வைத்தியச்சாலையின் தவறான சிகிச்சையால் தான் தனது கணவர் விஜய்யின் கால் பறிபோனதாக கூறி அவரது மனைவி வேளாங்கண்ணி காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாங்கண்ணி, தவறான சிகிச்சையால் தனது கணவரின் கால் பறிபோகி இருப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோகி இருப்பதாக அவர் கூறினார். மேலும் உடனடியாக தவறான சிகிச்சை அளித்த வைத்தியசாலையின் உரிமையாளர் சிவசாமி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.