எப்போ முடியும் இந்த கொடுமை..!! பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்..!!
பெருந்துறை அடுத்த பாலக்கரை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 35 குழந்தைகள் 5 ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். பாலக்கரை, கூலிக்காட்டு வலசு, இந்திரா நகர் பகுதிகளை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளே இதில் அதிகம் உள்ளனர். இந்த குழந்தைகளை தினமும் இருவர் வீதம் பிரித்து பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை தூய்மைபடுத்தும் பணியில் தலைமை ஆசிரியை ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. கிருமி நாசினிகளை மாணவர்கள் வெறும் கைகளில் பயன்படுத்தியதால் அவர்களுக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பெற்றோர் விசாரித்த போது பள்ளியில் தினமும் மாணவர்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து தலைமை ஆசிரியையிடம் முறையிட்டும் தொடர்ந்து இதே செயலில் ஈடுபடுத்தியதால் அதிருப்தி அடைந்த பெற்றோர், குழந்தைகள் நல அலுவலகத்திலும் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில், பெருந்துறை காவல் ஆய்வாளர் மசூதா பேகம் மற்றும் பெருந்துறை, சென்னிமலை, பவானி வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளியில் விசாரணை நடத்தினர். பள்ளி முன்பாக திரண்ட பெற்றோர், பட்டியலின மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மீது SC,ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.