பெரும் சரிவை சந்தித்தது பேடிஎம்.. வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்..!

பெரும் சரிவை சந்தித்தது பேடிஎம்.. வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்..!
X

கடந்த 2010-ம் ஆண்டு விஜய் சேகர் சர்மா என்பவரால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் முக்கிய பகுதியான 'பேடிஎம்' பெரும் வளர்ச்சி அடைந்து வந்தது. இதையடுத்து, நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேடிஎம் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது.

பேடிஎம் நிறுவனம் ஐபிஓ வெளியிடும் போது, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு அந்நிறுவனத்தின் பங்கு சரிவை மட்டுமே சந்தித்துள்ளது. ஐபிஓ லாக் பிரியட் முடிந்த உடனே அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் பலரும் தங்களின் முதலீட்டை விற்கத் தொடங்கினார். இதனாலும் பேடிஎம் நிறுவனத்தின் பங்கு பெறும் சரிவை சந்தித்தது.


பேடிஎம் நிறுவனம் 2150 ரூபாய்க்கு ஐபிஓ வெளியிட்டது. ஆனால் அதன் பிறகு பங்கு விலையில் உயர்வு என்பதே இல்லை. தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில் காலாண்டு முடிவுகளிலும் நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாகவே தெரிவித்திருந்தது. இரண்டு காலாண்டுகளாக தொடர்ந்து நஷ்டம் அடையத் தொடங்கியதால், பலரும் பேடிஎம் பங்குகளை விற்பனை செய்யத் தொடங்கினர். அந்த சமயத்தில் பேடிஎம் நிறுவனர் முதலீட்டாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், நிறுவனத்தின் கடன் வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சரியாக பயணிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த சார்ஃபேட் தன்வசம் வைத்திருந்த 29 மில்லியன் பங்குகளை பிளாக் மார்க்கெட்டில் விற்பனை செய்தது. ஐபிஓ வெளியீடும் போது நிர்ணயிக்கப்பட்ட விலையை தற்போது போது வரை பேடிஎம் நிறுவனம் எட்டவில்லை.

பேடிஎம் நிறுவனத்தின் பெரும் சரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் ஷியாம் சேகர் கூறுகையில், "அவர்களிடம் தங்களின் பிசினஸ் குறித்து தெளிவான திட்டம் இல்லை. போலியான சந்தை மதிப்பில் அந்த நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டன. இதனால் பேடிஎம் பங்கு விலை ஏற்றம் இல்லை.


பேடிஎம் நிறுவனத்தின் முக்கிய தொழிலாக இருப்பது, யுபிஐ ஆப் மூலமாக பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் போது கிடைக்கும் கமிஷன் தொகைதான். ஆனால், தற்போது துறையில் பல நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்படுவதால், பேடிஎம்-மால் வளர்ச்சி அடைய முடியவில்லை. அரசின் பீம் அப், கூகுள் பே, போன் பே போன்றவை அதிக பயனளார்களை கொண்டுள்ளது.

பேடிஎம் நிறுவனம் தங்களின் முக்கிய தொழில் என்ன..?. அதில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வெற்றியை அடைவதற்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து அதற்கு ஏற்ப தங்களின் நடவடிக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனம் அதை எதுவுமே தற்போதுவரை செய்யவில்லை.

சிறிய அளவிலான கடன்கள் வழங்குவதுதான் இவர்களின் குறிக்கோள் என்றால், அந்த துறையில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். ஆனால், பேடிஎம் நிறுவனம் எல்லா பிசினஸையும் செய்ய ஆசைப்படுகிறது. அதாவது, எந்தவிதமான திட்டமும் இல்லாமல் நினைத்த நேரத்தில் நினைத்த தொழிலை செய்ய முடியாது. கடன் வழங்குவதுதான் இவர்களின் முக்கிய தொழிலாக கருதினால், அதில் பெரும் போட்டி தற்போது உள்ளது.


பெரும்பாலான துறைகளில் கால்பதித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தற்போது ஃபைனான்ஸியல் சேவையிலும் தடம் பதிக்க உள்ளது. ஜியோவின் வருகைக்கு பிறகு தொலைத்தொடர்பு துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டதை போலவே, ஃபைனான்சியல் துறையிலும் பெரும் மாற்றங்கள் இருக்கும். இதையெல்லாம் தாக்குபிடிக்கும் அளவுக்கு தங்களின் தொழிலை கூடுதல் கவனத்துடன் நடத்தினால் மட்டுமே அதில் வெற்றி அடைய முடியும். இல்லையெனில் பேடிஎம் நிறுவனத்தின் வீழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பது உண்மை" என்றார்.

தற்போது உள்ள சூழ்நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது கானல்நீராக உள்ளது. அவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கையின் மூலமாக மட்டுமே வளர்ச்சியை அடைய முடியும். பொருத்திருந்து பார்ப்பது நல்லது.

இன்றைய வர்த்தகத்தில் பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலை 451 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவனம் ஐபிஓ வெளியிட்ட போது இருந்த விலையுடன் ஒப்பீடும் போது 79 சதவிகித சரிவாகும். ஐபிஓ வெளியிட்டு ஒராண்டில் பெரும் சரிவை சந்தித்த முதல் நிறுவனம் பேடிஎம் என்றே கூறலாம். இதுவரை எந்த நிறுவனமும் இவ்வளவு பெரிய வீழ்ச்சி அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

Next Story
Share it