செல்போன் பயன்படுத்தக் கூடாது.. டாக்டர்களுக்கு அறிவுறுத்தல்..!

செல்போன் பயன்படுத்தக் கூடாது.. டாக்டர்களுக்கு அறிவுறுத்தல்..!
X

அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற தொடர் மருத்துவக் கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று தொடர் மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சென்னை மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ராகவேந்திரன் கூறியதாவது: "அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் சில சிக்கல்களைத் தவிர்க்கவே முடியாது. அவற்றை மருத்துவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.


அதேவேளையில், சில சிக்கல்கள் தாமாக உருவாக்கிக் கொள்ளக் கூடியவையாக இருக்கும். அவற்றை மருத்துவக் குழுவினர் சற்று சிந்தித்து தவிர்க்க வேண்டும். அவற்றில் முதன்மையானது செல்போன் பயன்பாடு. அறுவை சிகிச்சை அரங்குக்குள் செல்போன் பயன்படுத்துவதை மருத்துவர்கள் முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலான நேரங்களில், அறுவை சிகிச்சையின்போது கவனச் சிதறல் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக செல்போன் பயன்பாடு உள்ளது. அவசிய தேவை இருந்தால்கூட, அதை ஒரு உதவியாளர் மூலமாகத்தான் கையாள வேண்டும்.

அதேபோல், அறுவை சிகிச்சை அரங்குக்குள் தேவையற்ற சச்சரவுகள் செய்தல், வேறு மருத்துவப் பணிக்கு முன்னுரிமை அளித்தல், போதிய தகவல்களைப் பரிமாறிக்கொள்ளாமல் இருத்தல் போன்ற செயல்களும் பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றையும் தவிர்க்க வேண்டும். பொதுவாக, 10 ஆயிரம் அறுவை சிகிச்சைகளில் சராசரியாக 4.5 அறுவை சிகிச்சைகளில் தவறுகள் நிகழ்வதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. உண்மையில் அதைக் காட்டிலும் 3 அல்லது 4 மடங்கு அதிகமான தவறுகள் நிகழ்கின்றன. அவற்றைத் தடுக்க வேண்டும்" என்றார்.

Next Story
Share it