மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து சிறுமி உயிரிழப்பு!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெய்த கனமழை பல்வேறு இடங்களை புரட்டிப்போட்டுவிட்டது. பலரும் உடமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
நேற்று முன்தினம் ஆறு மணி நேர அதீத கனமழையால் 44 சென்டிமீட்டர் மழை பதிவானது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது மாவட்டம் முழுவதும் 70 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி மழை நீரில் மூழ்கியுள்ளது.
மழைநீர் சேர்ந்து பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதி மக்கள் அரசின் 36 நிவாரண முகாம்களில் 17,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகளைச் சேர்ந்த 20,000 மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முழுவதும் மழை ஓய்ந்திருந்த நிலையில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் சற்று தண்ணீர் குறைந்து இருந்தது. இன்று காலை முதல் தொடரும் மழையால் விவசாயிகள் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சீர்காழி அருகே எருக்கூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, வீட்டு வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in