செல்போனுக்கு சார்ஜ் போடுவதில் தகராறு: கம்பியால் தாக்கி வாலிபர் கொலை..!
கர்நாடகாவில், செல்போனுக்கு சார்ஜ் போடுவதில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா முரளிமராட்டி கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பா(39). அதே கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இருவரும் நண்பர்கள். கடந்த 7-ம் தேதி இரவு சித்தப்பா, திம்மப்பாவின் வீட்டிற்கு சென்று தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். இதுதொடர்பாக திம்மப்பா, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் சித்தப்பாவிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சித்தப்பா, வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் திம்மப்பாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் திம்மப்பா பலத்த காயம் அடைந்த உயிருக்கு போராடினார். அவரது, மனைவி லட்சுமி உள்பட குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக உடுப்பி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி திம்மப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி திம்மப்பாவின் மனைவி லட்சுமி கார்கலா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சாகர் போலீசார், சித்தப்பாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.