பிரார்த்தனை செய்ய வந்த போதகர் ஆட்டோ டிரைவர் மனைவியுடன் 'எஸ்கேப்'..!
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்பு காலனி பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஆட்டோ டிரைவர், தனது 45 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இருதயத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு ததேயுபுரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுமார் 45 வயதுடைய ஒரு நபர் தன்னை போதகர் எனக் கூறிக்கொண்டு ஆட்டோ டிரைவருக்கு அறிமுகமானார்.
அதன் பின்னர், பிரார்த்தனை செய்வதற்காக ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்துள்ளார். அப்போது, ஆட்டோ டிரைவர் மனைவிக்கும், போதகருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி காலையில் சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோ டிரைவர் வீடு திரும்பியபோது, வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவரது மனைவியையும் காணவில்லை. அவருடைய செல்போனை தொடர்பு கொண்டபோது, அது 'சுவிட்ச் ஆஃப்' ஆகி இருந்தது.
இதையடுத்து, உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும், மனைவியைப் பற்றி தகவல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வழக்கமாக பிரார்த்தனைக்கு வரும் போதகரும் வராமல் இருந்ததால் ததேயுபுரம் சென்று அவரது வீட்டில் ஆட்டோ டிரைவர் விசாரித்துள்ளார். அப்போது, போதகரும் 28-ம் தேதி காலையில் இருந்து மாயமான தகவல் கிடைத்துள்ளது. எனவே, போதகருடன் தனது மனைவி சென்று இருக்கலாம் என ஆட்டோ டிரைவர் கருதினார்.
இந்த நிலையில், ஆட்டோ டிரைவரின் மனைவி, திருமணமான தனது மகளுக்கு போன் செய்து, தான் போதகருடன் தேங்காப்பட்டணம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்து ஆட்டோ டிரைவர் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சி.எஸ்.ஆர். பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை, போதகருடன் ஆட்டோ டிரைவர் மனைவி கொல்லங்கோடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, போலீஸ் தங்களை தேடியதால் தஞ்சம் அடைந்ததாக போதகர் தெரிவித்தார்.
ஆட்டோ டிரைவரின் மனைவி, போலீசில் கூறுகையில், 'கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அதனால், தான் கணவர் வீட்டிற்கு செல்லவில்லை என்று தெரிவித்தார். பின்னர் அதை இருவரும் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு சென்றனர். கள்ளக்காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.