ஹிந்தி ஒழிக என்று கூறவில்லை.. பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் கமல்ஹாசன்..!
ஹிந்தி ஒழிக என்று நான் கூறவில்லை; தமிழ் வாழ்க என்றுதான் சொல்கிறேன். அனைவரும் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது 68-வது பிறந்தநாளை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சிஅலுவலகத்தில் நேற்று கொண்டாடினார். அவருக்கு, கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு 68 மணி நேரம் தொடர்ந்து நடக்கும் மருத்துவ முகாமை கமல்ஹாசன் பார்வையிட்டார்.
பின்னர், சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள், கட்சித் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். அப்போது, கமல்ஹாசன் பேசியதாவது: "எனக்கு அரசியல் என்பது கடமை. எத்தனை தோல்விகள் வந்தாலும், நாம் துவளாமல் இருப்பதற்கு காரணம், நமது கொள்கையில் பற்றாக இருக்கிறோம்.
இந்தியாவில் இருந்து தமிழகம் என்ற தீவை நாம் பாதுகாக்க வேண்டும். நான் ஹிந்தி ஒழிக என்று கூறவில்லை; தமிழ் வாழ்க என்றுதான் சொல்கிறேன். அனைவரும் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்ற மொழிகளுடன் ஒப்பிட்டு தமிழ் மொழியின் அருமையை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் விரைவில் பத்திரிகை தொடங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. சாதியைப் பற்றி பேசுவதை, சாதியை தூக்கிப் பிடிப்பதை அனைவரும் நிறுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.