கொசுக்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிரபல தாதா!!
சிறையில் கொசு தொல்லை இருப்பதை நிரூபிக்க தாதா ஒருவர் கொசுக்களை பிடித்து பாட்டிலில் அடைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தார்.
நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான இஜாஜ் லக்டாவாலா என்பவரை 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் தற்போது மும்பை தலோஜா சிறையில் உள்ள நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சிறையில் கொசு தொல்லை அதிகம் இருப்பதால், கொசுவலை பயன்படுத்த அனுமதி தேவை என கோரியிருந்தார்.
ஏற்கனவே கொசுவலை பயன்படுத்தி வந்ததாகவும் எனவும், கடந்த மே மாதத்தில் பாதுகாப்பு காரணங்கள் எனக் கூறி கொசுவலைகளை சிறை அலுவலர்கள் எடுத்து சென்று விட்டார்கள் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன் ஆஜரான அவர், தன்னிடம் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை நீதிபதிகளிடம் காட்டினார். அந்த பாட்டில் முழுவதும் கொசுக்கள் இருந்தன.
இத்தனை கொசுக்கள் தினமும் வாட்டி வதைப்பதால் கொசு வலை பயன்படுத்த அனுமதி வேண்டும் என்றார். சிறையில் குற்றவாளிகள் தற்கொலை செய்யும் அபாயம் அதிகரித்து வருதால்தான் கொசுவலைக்கு அனுமதிக்கவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் பதில் கூறினர்.
வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், கொசுவலை பயன்படுத்த அனுமதி வழங்க முடியாது. வேண்டுமென்றால் ஓடோமாஸ் போன்ற க்ரீம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றனர். அதேபோல், சிறைச்சாலையில் கொசுக்களை அழிக்கும் பணியை சிறைத்துறை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
newstm.in