ஆசை காதலனுக்கு ஆசிட் ஜூஸ் கொடுத்தது ஏன்..?: இளைஞர் மரணத்தில் பகீர் தகவல்..!
முதல் கணவன் உயிரிழப்பான்; இரண்டாவது கணவருடன் மட்டுமே வாழ முடியும் என ஜோதிடர் சொன்னதை நம்பி, காதலனுக்கு ஆசிட் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் என்ற கல்லூரி இறுதியாண்டு மாணவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மரணத்திற்கு காதலி வழங்கிய குளிர்பானம் தான் காரணம் என ஷாரோன் ராஜின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசாரும் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஷாரோன் ராஜ் காதலி கிரீஷ்மாவின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர், இந்தப் பெண்ணின் முதல் கணவன் உயிரிழப்பான்; இரண்டாவது கணவருடன் மட்டும் தான் இந்தப் பெண் வாழ முடியும் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய காதலி கிரீஷ்மா, தன்னுடைய குடும்பத்துடன் பக்காவாக பிளான் போட்டு செய்த செயல் என்பது தெரிய வந்துள்ளது.
இதன்படி, ஷாரோன் ராஜை நம்ப வைத்து கிரீஷ்மாவின் கழுத்தில் தாலியை கட்ட வைத்துள்ளனர். பின்பு வீட்டிற்கு அழைத்து வந்து முதலில் கஷாயம் ஒன்றை கொடுத்து விட்டு ஆசிட் கலந்த குளிர்பானம் ஒன்றையும் கொடுத்துள்ளார். காதலியை நம்பி ஷாரோன் ராஜ் அதை குடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து வாந்தி எடுக்கும்போது உடல் உறுப்புக்கள் சில வெளியில் வரும் நிலையிலும் யார் மீதும் சந்தேகமில்லை என்றும் கூறியுள்ளார். சந்தேகத்தின் பெயரில் அவரது குடும்பத்தாரிடையே விசாரணை நடத்தும் போது இந்த திடுக்கிடும் தகவல்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. மேலும் இது குறித்த போலீசார் காதலி உட்பட அவரது குடும்பத்தாருடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.