இங்கிலாந்தின் பிரதமரானார் இந்திய வம்சாவளி!! யார் இந்த ரிஷி சுனக்?
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 6 வாரங்களுக்கு முன்னர் பதவியேற்றார். அதன்பின் அண்மையில் மினி பட்ஜெட் ஒன்றை லிஸ் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் தாக்கல் தோல்வியில் முடிந்ததால் 45 நாட்களில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை துறக்க, ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனக்கின் குடும்பம் 1960-ல் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. 42 வயதான ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் சவுத்ஹாம்ப்டன் பகுதியில் பிறந்தவர். இவரின் தந்தை அந்நாட்டின் சுகாராத்துறையில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார். தாயார் மருந்துக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ரிஷி சுனக், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தார். உலகின் முன்னணி நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ்சில் முன்னணி பொறுப்புகளை வகித்து வந்தார்.
இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009-ம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படிக்கும்போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
2015-ம் ஆண்டில் தீவிர அரசியல் களத்தில் குதித்த ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு ரிச்மன்ட் பகுதியின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். பிரெக்சிட் ஆதரவாளரான இவர், அன்றைய பிரதமர் தெரேசா மேவின் அரசில் அமைச்சராக பணியாற்றினார். 2019-ம் ஆண்டு தேர்தலில் போரிஸ் ஜான்சன் பிரதமராக ஆதரவு அளித்து பரப்புரை செய்தார் ரிஷி. தேர்தலில் வென்று போரிஸ் ஜான்சன் பிரதமரான நிலையில், ரிஷி சுனக்கிற்கு நிதித்துறை தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
பின்னர் 2020-ம் ஆண்டில் பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோருக்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் அமைச்சரவை பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் ரிஷி சுனக் நிதித்துறையில் செய்த நடவடிக்கைகள் அவருக்குப் பாராட்டுகளைத் தந்துள்ளது. அதே வேளை, குறுகிய காலத்திலேயே அரசியலில் இவர் பெரும் வளர்ச்சி பெற்றதற்கும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தியர்களிடையே அதிக எதிர்பார்ப்புக்கள் இருந்த நிலையில் தற்போது ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்பட்டது பெருமைக்குரியதாக இருக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனாக்கை அந்நாட்டு மன்னர் 3ம் சார்லஸ் நியமித்தார். இங்கிலாந்தில் புதிய ஆட்சியை அமைக்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பதவியேற்றார்.
பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமது அதிகாரப்பூர்வ வீட்டு வாயிலில் நின்று மக்களுக்கு ரிஷி சுனக் உரையாற்றினார்.நாட்டின் பொருளாதார உறுதி நிலையை ஏற்படுத்துவதே தமது அரசின் முதல் திட்டமாகும் என ரிஷி சுனக் கூறினார்.ஏற்கனவே நடந்துவிட்ட தவறுகளை சரிசெய்யவே நான் தேர்ந்தெடுக்கப்பட்டுளேன் என்று ரிஷி சுனக் கூறியுள்ளார். எனது நடவடிக்கைகளின் மூலம் கட்சியிலும் நாட்டிலும் ஒற்றுமையே உருவாக்குவேன் என ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். மக்களின் நலனுக்காக இரவு பகலாக உழைக்க உறுதி ஏற்பதாகவும் ரிஷி சுனக் பேட்டியளித்துள்ளார்.
.png)