பிரபல எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மரணம்!!
1941-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் பிறந்த செயப்பிரகாசம், மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார். 1968 முதல் 1971-ம் ஆண்டு வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார் இவர், 1971 முதல் 1999-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநராகப் பணியாற்றி ஒய்வு பெற்றார்.
காடு, இரவுகள் உடையும், புதியன, இரவு மழை உள்பட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ள பா. செயப்பிரகாசம், பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். மேலும் சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்து எழுதியுள்ளார்.
1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்கு சென்ற இவர், கடந்த 23-ம் தேதி மாலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்துக்கு மணிமேகலை என்ற மனைவியும் தீபன் என்ற மகனும் சாருநிலா என்ற மகளும் உள்ளனர். தீபன் ஆஸ்திரேலியாவிலும், சாரு நிலா அமெரிக்காவிலும் உள்ளனர்.
பா.செயப்பிரகாசம் தனது மறைவுக்குப் பிறகு எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என தான் வாழ்ந்த போது தனது உறவினர்களிடமும் சக நண்பர்களிடமும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று 25-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அவரது வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்பு பா.செயபிரகாசத்தின் உடல் மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.