நாளை உண்ணாவிரதம்.. இபிஎஸ் தரப்பினர் அறிவிப்பு..!
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்காததைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலாக, ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்குள் முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, அமைச்சர் துரைமுருகனின் வலியுறுத்தலுக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று ஒருநாள் அவையில் பங்கேற்க தடை விதித்து அவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனால், அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் அனைவரும், அவைத் தலைவருக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு அவைக்கு வெளியே தர்னாவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவரைக் கண்டித்தும், ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்க வலியுறுத்தியும் இபிஎஸ் தரப்பினர் நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை(புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். நாளை காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.