ரயிலில் தள்ளி மாணவி கொலை: தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்..!
பரங்கிமலையில், காதலனால் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் இன்று உயிரிழந்தார் எனக் கூறப்பட்ட நிலையில், அவருடைய மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சத்யா என்ற சத்ய ப்ரியா(20). இவர் தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் 1.15 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது தோழிகளுடன் வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சத்தியப்பிரியாவுடன் பேசிக் கொண்டிருந்த போதே, அவரை ஒன்றாவது நடைமேடைக்கு வந்துகொண்டிருந்த ரயில் முன் தள்ளி விட்டார். ரயில் ஏறி இறங்கியதில் சத்யாவின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.
இதனிடையே, மகள் கொலை செய்யப்பட்டதையறிந்து வேதனையடைந்த மாணவியின் தந்தை மாணிக்கத்திற்கு இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே, உறவினர்கள் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என முதலில் தகவல் வெளியானது.
ஆனால், மாணவியின் தந்தை மாணிக்கத்தின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.