1. Home
  2. தமிழ்நாடு

மாணவியை கொலை செய்தது ஏன்..?: கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!

மாணவியை கொலை செய்தது ஏன்..?: கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சத்யா என்ற சத்ய ப்ரியா(20). இவர் தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் 1.15 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது தோழிகளுடன் வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சத்தியப்பிரியாவுடன் பேசிக் கொண்டிருந்த போதே, அவரை ஒன்றாவது நடைமேடைக்கு வந்துகொண்டிருந்த ரயில் முன் தள்ளி விட்டார். ரயில் ஏறி இறங்கியதில் சத்யாவின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மாணவியை கொலை செய்தது ஏன்..?: கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சத்யாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆலந்தூர் காவலர் குடியிருப்புக்கு எதிரே வசித்து வந்த சதீஷ்(23) என்பவர் காதல் பிரச்சனையில் சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ரயில்வே காவல்துறையில் மூன்று தனிப்படையும், மவுண்ட் காவல்துறையின் நான்கு தனிப்படையும் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், துரைப்பாக்கம் அருகே தலைமறைவாக இருந்த சதீஷை தனிப்படை போலீசார் நள்ளிரவு 12.30 மணியளவில் கைது செய்தனர். சதீஷிடம் மேற்கொண்ட விசாரணையில், சத்யாவும் சதீஷும் பல ஆண்டு காலமாக காதலித்ததும் பின்னர் சதீஷ் உடனான காதலை சத்யா முறித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரயில் முன் தள்ளி சதீஷ் கொலை செய்தார் என்பது தெரியவந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில், கைது செய்யப்பட்ட சதீஷின் தந்தை தயாளன்(67) ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். சத்யாவும் சதீஷூம் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். பின்னர் சதீஷ் வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு சேர்ந்து கஞ்சா பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் சதீஷை விட்டு சத்யா பிரிந்து வந்துள்ளார்.


சத்யா காதலை முறித்துக் கொண்டதற்கு பிறகு, வீட்டின் அருகே ஒரு முறை தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறி சதீஷ் சண்டை போட்டுள்ளார். பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் ஒரு முறை தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். ஐந்து மாதத்திற்கு முன்னர், சத்யா படிக்கும் கல்லூரி வாசலில் சத்யாவின் முடியை பிடித்து அனைவர் முன்னிலையிலும் அடித்து அசிங்கப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று, தன்னை மீண்டும் காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் சதீஷ் கூற, சத்யா முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் சத்யாவை ரயில் முன் தள்ளியுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Trending News

Latest News

You May Like