பெரும் சோகம்.. குளிக்கச் சென்ற நடிகர் கோவில் குளத்தில் மூழ்கி பலி..!
கேரளாவில், கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற திரைப்பட இயக்குநரும், நடிகருமான தீபு பாலகிருஷ்ணன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சலகுடா பகுதியைச் சேர்ந்தவர் தீபு பாலகிருஷ்ணன்(41). மலையாள திரைப்படங்களில் உதவி இயக்குநராக இருந்து வருகிறார். இவர் நேற்று (அக்.10-ம் தேதி) அதிகாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள கோவில் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார்.
வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீபுவை தேடிய போது, அவருடைய உடை மற்றும் காலணி கிடைத்திருக்கிறது. நீண்ட தேடுதலுக்கு பிறகு, இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் வெளியான 'உரும்புகள் உறங்கரில்லா', 'ஒன்ஸ் இன் மைன்ட்' மற்றும் 'பிரேம சூத்ரம்' போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள தீபு, 'உரும்புகள் உறங்கரில்லா' படத்தில் நடித்துள்ளார்.