1. Home
  2. தமிழ்நாடு

இந்த இணையதளங்களை முடக்கணும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

இந்த இணையதளங்களை முடக்கணும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

கோவில் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்தக் கூடாது. தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 60-ம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த கோவிலை அணுகும் பலர் தவறுதலாக தனியார் இணையதளங்களை தொடர்பு கொள்கின்றனர்.


கோவில் நிர்வாகம் தர்ப்பில் திருமணம் நடத்துவதற்கு 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். ஆனால், தனியார் இணையதளங்களில் 4 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இது போன்ற தனியார் இணையதளங்களை முடக்க கோர்ட் உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு, மதுரை ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன், நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்தக் கூடாது. தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும்.


அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மக்கள் உணர்வுகளை வியாபாரமாக அணுகக் கூடாது' என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Trending News

Latest News

You May Like