மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி..!!
மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள சக்கிமங்கலம் சௌராஷ்டிரா காலனியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் ஆதிசேஷன் (14). இவர் சக்கிமங்கலம் நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் ஹேமன் (8). இவர், கருப்பாயூரணியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், சிறுவர்கள் ஆதிசேஷன், ஹேமன் ஆகியோர் நேற்று சக்கிமங்கலத்தில் உள்ள இளம்பள்ளி கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளனர். அவா்கள் கண்மாயில் ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில், இருவரும் நீரில் மூழ்கினா். நீண்ட நேரம் ஆகியும், இவர்கள் இருவரும் வீட்டிற்கு வராமல் இருந்தனர். இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோர் தேடி உள்ளனர்.
அங்குள்ள கண்மாய்க் கரையில் பார்த்தபோது, சிறுவர்களின் உடைகள் மற்றும் காலணிகள் கிடைந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீயணைப்புத்துறையினர் மற்றும் சிலைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி அந்த கண்மாயில் இருந்து சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.
சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இரண்டு பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.