குட் நியூஸ்..!! ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்..!!
அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களும் மனித சமூகத்திற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. முதலில் வெறும் பொழுது போக்கிற்காக இலவசமாக விளையாடத் தொடங்கும் பலரும், ஒரு கட்டத்தில் பணத்தை வைத்து விளையாடத் தொடங்குகினர்.
இதன் காரணமாக, பணத்தை இழப்போர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றனர்.
இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை முதல்வர் அவர்களிடம் சமர்ப்பித்தது. மேற்கண்ட அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடையைச் செய்யும் அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்மாதம் 17-ம் தேதி தொடங்கவுள்ள தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு முழுமையான சட்டமாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.