லஞ்சம் கேட்ட ஆடியோ வைரல்.. காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்..!
கடந்த 22-ம் தேதி, புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு ஒரு தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது. மதுரை, ஒத்தக்கடை பகுதியில் இந்த பேருந்து வந்தபோது, வேகத்தடையில் அதிவேகமாக ஏறி இறங்கியதில் பேருந்தில் இருந்த மல்லிகா என்ற பெண் கீழே விழுந்தார்.
இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மல்லிகா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த பேருந்து ஜப்தி செய்யப்பட்டு ஒத்தக்கடை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், தனியார் பேருந்து உரிமையாளரிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் பேருந்தை விடுவிப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, ஆய்வாளர் முருகேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதைத் தொடர்ந்து, மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி இன்று முருகேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.