நீங்க அதிகமா ஆபாச படம் பாக்குறீங்க.. நூதன முறையில் மிரட்டி பணம் பறிப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரிகையை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர், ஓசூரில் உள்ள ஒரு நகைக் கடையில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சந்திரகுமார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், 'நான், சென்னை சைபர் கிரைம் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன்.
சமீப நாட்களாக நீங்கள் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்த்து வருவது குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும்' எனக்கூறி மிரட்டி உள்ளனர்.
அதை நம்பிய சந்திரகுமார், அவர்கள் குறிப்பிட்ட நம்பருக்கு 'போன் பே' மூலம் மூன்று தவணைகளாக பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால்சந்தேகமடைந்த சந்திரகுமார், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த நபர்கள் பேசிய செல்போன் எண்ணின் முகவரி போலி என்பதும், பாலக்கோடு அருகில் சிம் கார்டு வாங்கப்பட்டதும் தெரிந்தது.
பணம் எடுத்த வங்கி விவரத்தை போலீசார் விசாரித்தபோது, பணம் பெற்றவர் சேலம் மாவட்டம், கரடூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து என்பதும், அவரது நண்பர்கள் மூன்றுபேர் இணைந்து பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. யூ-டியூப்பில் போலீஸ் வாக்கி டாக்கி சத்தத்தை வைத்துவிட்டு அதன் பின்னர் செல்போனில் பேசி பணப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதுபோல பலரிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் தெரிந்துள்ளது.
இதையடுத்து சந்திரகுமாரிடம் சைபர் கிரைம் போலீசார் போல் மிரட்டி பணம் பறித்த தர்மபுரி மாவட்டம், சுங்கரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மால்வின், மணிமுத்து, காரிமங்கலத்தைச் சேர்ந்த மாரியப்பன், கிருஷ்ணகிரி மாவட்டம், சாப்பர்த்தி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, மூன்று செல் போன், வங்கிக் கணக்கு புத்தகம், டெபிட் கார்டுகள், 4 சிம் கார்டுகள் மற்றும் 6 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.