சோலார் பேனல் மூலம் கீரை கிடைக்கும்.. சவுதி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!
சோலார் பேனல்கள் மூலம் கீரை வளர்க்கும் தொழில்நுட்பத்தை சவுதி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், பாலைவனத்திலும் தாவரங்களை வளர்க்க முடியும். மேலும், குறைந்த செலவில் எதிர்காலத்தில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை பாதிப்பை சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின்படி, வழக்கமான சோலார் பேனல்களுக்கு பதிலாக 'ஹைட்ரோஜெல்' பூசப்பட்ட சோலார்பேனல்கள் ஒரு பெரிய உலோக பெட்டியின் மேல் பொருத்தப்படுகின்றன. ஹைட்ரோஜெல் என்பது ஒரு பாலிமர் வேதிப்பொருள். இது, இயற்கையாக காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீராக மாற்றி சிறிது சிறிதாக வெளியிடுகிறது.
இதில் கிடைக்கும் தண்ணீர் மூலம் தாவரம் வளர்க்கும் பிளாஸ்டிக் பெட்டியில் விதை விதைத்து 'கீரை' செடி வளர்க்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனையாக கோடைகாலமான கடந்த ஜூன் 16-ல் 60 கீரை விதை நடப்பட்டது. ஜூலை 1-ல் இதில் 60க்கு 57 விதைகள் நன்றாக முளைத்து 18 செ.மீ. உயரம் வரை வளர்ந்தது. பரிசோதனையில் 1519 வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது. இரண்டு வாரத்தில் ஹைட்ரோ ஜெல்லில் இருந்து மொத்தம் 2 லிட்டர் தண்ணீர் கிடைத்தது.
இதுகுறித்து விஞ்ஞானி வாங் கூறுகையில், "ஒருங்கிணைந்த அமைப்பின் மூலம் மின்சாரம், தண்ணீர், உணவு என மூன்றையும் தயாரிப்பது எங்கள் திட்டத்தின் முக்கிய குறிக்கோள். கோடை மற்றும் குளிர்காலத்திலும் ஹைட்ரோஜெல் செயல்படும். இரவில் நீராவியை உறிஞ்சி பகலில் சூரிய ஒளி அதிகரித்த பின் அதை நீராக மாற்றுகிறது.
மேலும், இந்தத் தொழில்நுட்பம் மூலம்குடிநீரும் கிடைக்க உதவுகிறது. பாலைவனம், சிறிய தீவுப்பகுதிகளில் இந்தத் திட்டம் ஏற்றதாக இருக்கும். பொருளாதார ரீதியாக இதை மாற்றும் முன் இந்த அமைப்பின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்த வேண்டியுள்ளது" என்றார்.