அதிமுகவில் மீண்டும் பரபரப்பு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார்.
அதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது.
மேலும் பொதுக்கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஏழாவது அமர்வில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தனர்.
அதிமுகவில் இருவரும் தலைவராக தொடர முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடியும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.
newstm.in