குணமடைந்து வீடு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
கடந்த 25-ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா இல்லை என தெரியவந்தது. பின்னர், அவரை 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதன்பேரில் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் எச்1என்1 வகை இன்ஃபுளூயன்சா வைரல் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது, அன்பில் மகேஷ் குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.