மலைப்பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு..!!
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. இந்த மலைப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் கடுங்குளிரும், மழையும் பொழிவதால், அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஸ்வெட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக, பள்ளிகள் மூடப்பட்டிருந்தால், ஸ்வெட்டர்கள் வழங்கப்படவில்லை. ஆனால், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பருவமழை தொடங்குவதற்கு முன்னரே பல இடங்களில் மழை பெய்து வருவதால், மலைப்பகுதிகளில் குளிர் வாட்டுகிறது. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற பகுதிகளில் கடுங்குளிர் நிலவுவால், பள்ளி மாணவர்கள் குளிரில் நடுங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டிற்கு, ஸ்வெட்டர், ஸ்கூல்பேக், ரெயின்கோட் உள்ளிட்டவை, அரசு சார்பில் இதுவரை வினியோகிக்கவில்லை என அப்பகுதி மாணவர்களும் பெற்றோர்களும் கூறி வந்தனர். மேலும் விரைவில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு 2023-2024 கல்வி ஆண்டுக்கான, கொடைக்கானல் ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 1.17 லட்சம் கம்பளிச்சட்டைகள் (ஸ்வெட்டர் ) வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அதற்கான ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.