பாம்புக் கடியில் இருந்து பலரைக் காப்பாற்றியவர் பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்..!!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிருதிவெனு குடிடிப்பா கிராமத்தில் வசித்து வருபவர் கொண்டூரி நாகபாபு சர்மா (48). பூசாரியான இவர் ஐதராபாத்தில் வசித்து வந்தார். இவரது தந்தை பாம்பு பிடிப்பவர் என்பதால், இவருக்கும் பாம்பு பிடிக்கும் பழக்கம் இருந்ததுள்ளது.
இந்த நிலையில், நாகபாபு சர்மா தசராவை முன்னிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான கிருதிவெனு குடிடிப்பாவுக்கு வந்ததுள்ளார். அப்போது பீத்தலவா என்ற பகுதியில் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டதால், கிராம மக்கள் நாகபாபு சர்மாவை அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்துக்கு சென்ற அவர், பாம்பை பிடித்து வெளியே எடுத்து வந்த போது, பாம்பு அவர் கையில் கடித்துவிட்டது.
உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக மச்சிலிப்பட்டினத்திற்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து மச்சிலிப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நாகபாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாம்புக் கடியில் இருந்து பலரைக் காப்பாற்றிய நாகபாபு, பாம்புக் கடித்து உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது இறுதிச்சடங்கில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு நாகபாபுவுக்கு அஞ்சலி செலுத்தினர்.