பந்திக்கு செல்ல ஆதார் கார்டு காட்டியவர்கள் மட்டுமே அனுமதி..!!உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமணத்தில் விநோதம்.!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், உறவினர்கள், நண்பர்கள் என தங்களது ஆதார் அட்டையை காட்டிய பிறகே பந்திக்கு அனுமதிக்கப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், திருமண விழாவில் விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் தங்களது ஆதார் அட்டையை காட்டிய பிறகே பந்திக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பாதி கதவு மூடப்பட்ட நிலையில், ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு ஒருவர் ஒருவராக உள்ளே செல்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பந்திக்கு செல்ல எதற்காக ஆதார் அட்டையை காண்பிக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சமூகதளவாசிகள் குமுறி வருகின்றனர்.
தகவலின் படி, திருமணம் நடைபெற்ற தினத்தில் செப்டம்பர் 21-ம் தேதி ஒரே மண்படத்தில் 2 திருமணங்கள் நடைபெற்றதால் இரு திருமண வீட்டாரின் உறவினர்களும் குவிந்தனர். குழப்பத்தின் மத்தியில், மணமகளின் குடும்பத்தினர் கலக்கமடைந்து உணவை வழங்குவதை நிறுத்த முடிவு செய்தனர்.
கூட்டத்தை சமாளிக்க ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்தனர். இருப்பினும், திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் அந்த நேரத்தில் அவர்களின் அடையாளச் சான்று இல்லாததால் உறவினர்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.