தூய்மைப் பணியாளருக்கு விருந்து.. முதல்வர் கெஜ்ரிவால் அசத்தல்..!
தேர்தல் வந்துவிட்டாலே தலித் மக்களின் வீடுகளுக்குச் சென்று உணவருந்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மத்தியில், குஜராத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளரை குடும்பத்துடன் தன்னுடைய டெல்லி வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்துள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் வெற்றியை அடுத்து, குஜராத் மீது கவனம் செல்லுத்தி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.25-ம் தேதி), அகமதாபாத் நகரில் தூய்மைப் பணியாளர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துரையாடினார்.
அப்போது ஹர்ஷ் சோலான்கி என்ற தூய்மைப் பணியாளர், "15 நாட்களுக்கு முன்பு நீங்கள் குஜராத் வந்த போது ஆட்டோ டிரைவர் ஒருவரின் வீட்டிற்கு சாப்பிடச் சென்றீர்கள். அதேபோல, வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த எங்களின் வீட்டிற்கும் சாப்பிட வரவேண்டும்" என்று கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், அந்த நபரின் பெயரை கேட்டார். தொடர்ந்து, "நிச்சயமாக நான் உங்களின் வீட்டிற்கு உணவு சாப்பிட வருவேன். அதற்கு முன்பாக நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அதற்கு நீங்கள் சம்மதித்தால் நான் உங்கள் வீட்டிற்கு சாப்பிட வருகிறேன்.
தேர்தல் வந்துவிட்டாலே தலித் மக்களின் வீடுகளுக்குச் சென்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உணவருந்தும் வழக்கத்தை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இதுவரை எந்த தலைவரும் தலித் மக்களை தங்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்ததில்லை. நீங்கள் என்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு வர முடியுமா..?" என்று கேட்டார் கெஜ்ரிவால்.
அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்ட ஹர்ஷிடம், "நாளை நான் உங்கள் குடும்பத்திற்கு விமான டிக்கெட் அனுப்புகிறேன். நீங்கள் டெல்லிக்கு வாருங்கள். நாளை என்னுடைய மொத்த குடும்பமும் உங்கள் குடும்பத்துடன் உணவு சாப்பிடும். அதன் பின்னர் நான் அடுத்த முறை அகமதாபாத் வரும்போது உங்கள் வீட்டிற்கு சாப்பிட வருகிறேன்" என்றார்.
அதன்படி, விமானம் மூலம் காலை 10 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்ற ஹர்ஷ் குடும்பத்தினரை, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி ராகவ் சந்தா வரவேற்றார். ஹர்ஷ் குடும்பத்தினர் டெல்லியில் உள்ள பஞ்சாப் பவனில் தங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மாலை 6.30 மணிக்கு குஜராத் புறப்பட்டனர்.