இன்று புரட்டாசி அமாவாசை, மகாளய பட்சம்... வழிபட வேண்டிய முறைகளும் கிடைக்கும் பலன்களும்..!!
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து வழிபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது.
இன்று புரட்டாசி அமாவாசையை மகாளய அமாவாசை என்றும், அதற்கு முந்திய பதினைந்து நாட்களை மகாளய பட்சம் என்றும் சொல்வர். இந்த நாட்களில் பிதுர்லோகத்தில் வாழும் நம் முன்னோர்கள் ஆசியளிக்க பூமிக்கு வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வரும்போது தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரும் தங்களை நினைக்கிறார்களா? உணவும் நீரும் வழங்குவார்களா? என்ற ஏக்கத்தோடு வருவார்கள். அப்போது நாம் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையோ, பழ வகைகளையோ தானம் செய்தால் அவர்களளின் தாகமும், பசியும் தீர்ந்து மகிழ்வுடன் திரும்பி செல்வார்கள் என்பது நம்பிக்கை.
மகாளய அமாவாசைக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த நாளில் நாம் நம் குல முன்னோருக்கு மட்டுமன்றி காருண்ய பித்ருக்கள் எனப்படும் மற்றவர்களுக்காவும் செய்கிறோம். அந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகள் காருண்ய பித்ருக்களையும் திருப்திப்படுத்துகிறது என புராணங்கள் கூறுகின்றன.
மகாளய பட்ச அமாவாசையின் போது முன்னோர்களை வழிபடாவிட்டால் திருமணத்தடை, பணம் சேராமல் போதல், பணியிடத்தில் கெட்ட பெயர், கணவன் - மனைவிக்குள் பிரிவுகள், குடும்பத்தில் சச்சரவுகள், தீராத கடன் தொல்லை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று சிலருக்கு இருக்கலாம். இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏதாவது வரலாம். அதற்குக் காரணம் அவர்கள் பித்ருக்களுக்கு முறையாக எள்ளும் நீரும் கொடுக்காததாலேயே ஆகும்.
இப்படித்தான் செய்யவேண்டும் என்று கண்டிப்பான வழிமுறைகள் ஏதும் இல்லை. ஆனால் செய்வதை மழு மனதாக பூரண கவனத்துடன் செய்ய வேண்டும். அப்படி இல்லாவிடில் பலன் கிட்டாது என்பது விதி. அவரவர் குல வழக்கப்படி சைவச் சாப்பாடு செய்து துறவிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும் அன்னதானம் செய்யலாம். அப்படிச் செய்யும் அன்னதானமானது நம் பித்ருக்களைச் சென்று சேர்ந்து திருப்திப்படுத்துகிறது. அவர்கள் ஆசிர்வாதம் நமக்குக் கிடைப்பதால் வாழ்க்கையில் வெற்றியும், மங்களமும் நிறைந்திருக்கும்.
நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள். அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும்.
அல்லது சூரிய பகவானை வணங்கி கிழக்கு பக்கம் நின்னு வலது கையில் எள் எடுத்து பின்பு தூய பாத்திரத்தில் தூய நீரை எடுத்து சூரியனை பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து பெயர்களை கூறி எள் மீது நீர் விட்டு கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும் பின்பு அந்த நீரை கடல், ஆறு, ஏரி, குளம் பகுதிகளில் விட்டலாம்.