நெகிழ வைத்த தருணம்.. சுனாமி மகளை சந்தித்தார் முதன்மைச் செயலர்..!

நெகிழ வைத்த தருணம்.. சுனாமி மகளை சந்தித்தார் முதன்மைச் செயலர்..!
X

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2004-ம் ஆண்டு கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றோராக மாறினர். சுனாமி தாக்கிய மறுநாள், கீச்சாங்குப்பம் கடலோரத்தில் அழுகுரல் கேட்ட மீனவர்கள் 2 வயது குழந்தையை மீட்டு, அப்போது கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல், வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட இரண்டரை வயது குழந்தையையும் கலெக்டரிடம் ஒப்படைத்தனர். இந்த இரண்டு குழந்தைகளையும் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைத்து பராமரிக்க, கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.


வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட குழந்தைக்கு சவுமியா என்றும், கீச்சாங்குப்பத்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு மீனா என்றும் பெயர் சூட்டினார். இரு குழந்தைகளையும் தன் குழந்தைகளாக ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா வளர்த்து வந்தாலும், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 150 குழந்தைகள் மீதும் தனி கவனம் செலுத்தி வந்தனர்.

தங்கள் குழந்தைகளாகவே பாவித்து பெற்றோர்களைப் போல் கவனித்துக் கொண்டதால், ராதாகிருஷ்ணனை அப்பா என்றும், அவரது மனைவி கிருத்திகாவை அம்மா என்றும் குழந்தைகள் அழைத்து வந்தனர். காப்பகத்தில் இருந்த குழந்தைகள் வளர்ந்து, திருமணமாகி சென்று விட்டனர்.

ராதாகிருஷ்ணன் முதன்மைச் செயலரான பிறகு நாகைக்கு வரும் போதெல்லாம் சவுமியாவையும், மீனாவையும் பார்த்துச் செல்வது, திருமணமாகி பல்வேறு இடங்களில் வசிக்கும் காப்பகத்தில் வளர்ந்தவர்களிடம் ஒருவித ஏக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொட்டாய்மேடு என்ற மீனவ கிராமத்தில் சுனாமியால் பெற்றோரை இழந்து, அன்னை சத்யா ஆதரவற்ற காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, தற்போது வேளாங்கண்ணி அடுத்த செருதூர் கிராமத்தில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் தமிழரசி (32) என்பவர் வீட்டிற்கு நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் உடன் ராதாகிருஷ்ணன் நேற்று சென்றார்.


இதையறிந்த தமிழரசி, தன் கணவர் விஜயபாலன் (35) என்பவருடன் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார். காரில் இருந்து ராதாகிருஷ்ணன் இறங்கியதும், சிறு குழந்தையைப் போல் ஓடிச்சென்ற தமிழரசி, ராதாகிருஷ்ணனை இறுகப் பிடித்தபடி, "ஏம்ப்பா இத்தனை வருஷமா என்னை பார்க்க வரவில்லை…" என, உரிமையோடு கேட்டபடியே வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

ராதாகிருஷ்ணன் வாங்கி வந்த பழங்களை ஆசையோடு தமிழரசி வாங்கிக் கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பழைய நினைவுகளை பேசிக்கொண்டிருந்ததை, கலெக்டர் அருண் தம்புராஜ், டி.ஆர்.ஓ. ஷகிலா ஆகியோர் நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின்னர், காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு தற்போது மலர்விழி என்பவரின் பராமரிப்பில் தங்கியுள்ள மீனா, சவுமியா, தரங்கம்பாடி கிராமத்தில் வசிக்கும் சாதனா ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்களுடனும் சிறிது நேரத்தை மலரும் நினைவுகளுடன் செலவிட்ட ராதாகிருஷ்ணன், கனத்த இதயத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Next Story
Share it