1. Home
  2. தமிழ்நாடு

சுடுகாட்டுக்கு பாதை கிடைத்தது: கறி சமைத்து மக்கள் மகிழ்ச்சி..!

சுடுகாட்டுக்கு பாதை கிடைத்தது: கறி சமைத்து மக்கள் மகிழ்ச்சி..!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஒன்றியத்தில் உள்ளது தட்டாங்குட்டை. இந்த ஊராட்சியில் உள்ள வீரப்பம்பாளையம் மற்றும் வீரமாத்திவலவு பகுதிகளில் வசிக்கும் 120 பட்டியலின குடும்பங்கள், தாங்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். அந்த வழியாகச் செல்லும் ஓர் ஓடையில் முள், சேறு, சகதி ஆகியவற்றைக் கடந்துதான் இறந்தவர்களின் உடலுக்கு இறுதி காரியம் நடத்தி வந்தனர்.

அதற்கும், மாற்றுச் சமூகத்தினர் சிலர் முட்டுக்கட்டை போட, பட்டியலின மக்களின் சுடுகாட்டுக்கு செல்ல தொடர் பேச்சுவார்த்தையின் மூலம், இருவரிடம் நிலம் வாங்கி, சாலை, இரண்டு பாலம், தண்ணீர் வசதி என்று சகலதும் செய்து கொடுத்து, பட்டியல் சமுதாக மக்களை நெகிழ வைத்திருக்கிறார்கள், ஊராட்சி மன்றத் தலைவி புஷ்பாவும், அவரின் தந்தை செல்லமுத்துவும். அதோடு, அந்த மக்களுக்கு கறிவிருந்தும் வைத்து மகிழ்ச்சியில் நிறைய வைத்திருக்கின்றனர்.


இதுகுறித்து பேசிய, ஊராட்சிமன்றத் தலைவி புஷ்பா, "எங்கப்பா இதுக்கு முன்னாடி தலைவரா இருந்தார். நான் படிச்சுட்டு, சென்னையில் பணியில் இருந்தேன். இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கியதால், அரசியல் மீது ஆர்வம் வந்து வேலையை ரிசைன் பண்ணிட்டு, தேர்தல்ல போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

இந்த மக்கள்தான் எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சாங்க. அதனால், இவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நானும் எங்கப்பாவும் நினைச்சோம். அவங்களோட 150 வருட சுடுகாடு பாதை பிரச்னையைப் போக்க அப்பா எவ்வளவோ முயற்சி எடுத்தார். அவர் தலைவரா இருந்தப்ப இந்த மக்களோட உறவினர்கள் இறந்தா, துக்க வீட்டுக்கு ரெண்டு நாள் கழிச்சுதான் போவார். ஏன்னா, 'தலைவரா இருந்து, எங்க பிரச்னையை தீர்த்தியா..?'னு கேட்பாங்கங்கிற பயம்தான்.

இந்த நிலையில்தான், அவங்க சுடுகாட்டுக்கு போற வழியில் நிலம் வச்சுருக்கிற பாரிவள்ளல், ஆறுமுகம்ங்கிற ரெண்டு பேர்கிட்ட அப்பாவும், நானும் தொடர்ந்து பேசினோம். அந்த மக்களோட 150 வருட வலியை சொன்னோம். உடனே, அவங்க மனசு மாறி இடம் தர ஒத்துக்கிட்டாங்க. ஆறுமுகம் ஒரு சென்ட் நிலத்தை ஒரு லட்சத்துக்கு தர ஒத்துக்கிட்டதால, ரூ.15,000 முதல் கட்டமா தந்திருக்கிறோம். பாரிவள்ளல் இரண்டரை சென்ட் நிலத்தை இலவசமா தந்தார். உடனே, அதிமுக முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏவுமான தங்கமணி சார்கிட்ட சொன்னோம்.


ரொம்ப சந்தோஷம். உடனே சொந்த பணத்தை போட்டு வேலையை ஆரம்பிங்க. நான் என்னோட தொகுதி நிதியில இருந்து, செலவாகும் அந்த பணத்தை ஒதுக்கிடுறேன்'னு சொன்னார். அதனால, சொந்தப் பணத்தில் இருந்து ரூ.15 லட்சம் செலவு பண்ணி, 400 லோடு ஓடை மண் அடிச்சு, ரோடு அமைச்சோம். அந்த ரோட்டோட ரெண்டு பக்கமும் தடுப்புச் சுவர் அமைச்சு, பட்டா ஓடையில ரெண்டு இடத்துலயும் பாலம் அமைச்சோம். இறந்த உடல்களை ஆம்புலன்ஸில் கூட சுடுகாடு வரைக்கும் எடுத்துட்டுப் போற அளவுக்கு பாதையை சிறப்பா அமைச்சோம். அதோடு, சுடுகாட்டுக்கு பைப்லைன் அமைத்து தண்ணீர் வசதியும் செஞ்சோம். மக்களோட முகத்தில் பூத்த மகிழ்ச்சியைப் பார்த்ததும், ரொம்ப நிறைவா இருந்துச்சு. தங்கமணி சார் வந்து திறந்து வைத்தார்.

'உடனே நீங்க செலவு செஞ்ச பணத்தை, என்னோட தொகுதி நிதியில் இருந்து ஒதுக்குறேன்'னு சொன்னார். ஆனா, எங்களோட இந்த செயல்பாட்டைப் பார்த்து எங்க மக்கள்ல சிலர், எங்களை வெறுப்பா பார்க்குறாங்க. அதுக்கு நாங்க கவலைப்படலை. சுடுகாட்டுக்கு வழி கிடைச்ச மக்களை இன்னும் சந்தோஷப்படுத்த நினைச்சு, 220 கிலோ கோழிக்கறி எடுத்து, கறிச்சோறு ஆக்கிப்போட்டோம். தொடர்ந்து என்னாலான உதவிகளை செய்ய இருக்கிறேன்" என்றார்.

Trending News

Latest News

You May Like