குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை தயவுசெய்து நாட்டுக்கு சொல்லுங்கள் - மநீம தலைவர் கேள்வி..!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய தருணம். இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அரசை வாழ்த்துகிறேன். தேச நலன் கருதி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். அதே நேரத்தில் தேசப் பெருமிதத்தின் இந்த தருணம் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது. நான் எனது பிரதமரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன், எங்கள் புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை தயவுசெய்து நாட்டுக்கு சொல்லுங்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்கக் கூடாது என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால்தான் நாட்டின் சட்டமாகும். பாராளுமன்றத்தின் அமர்வுகளை கூட்டவோ அல்லது ஒத்திவைக்கவோ ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டிற்கு இன்றியமையாதவர். சமரச நடவடிக்கை மேற்கொண்டு, ஜனாதிபதி, திரௌபதி முர்மு அவர்களை அழைக்குமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய பாராளுமன்றம் என்பது சாதாரண கட்டிடம் அல்ல. காலங்காலமாக இந்திய ஜனநாயகத்தின் இல்லமாக இது இருக்கும். நீங்கள் குடியரசு தலைவரை அழைக்காமல் போனால், வரலாற்றில் பெரும் பிழையாகப் பதியப்படும். அதனை நீங்கள் இப்போதே திருத்திக் கொள்ளுமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குடியரசின் புதிய வீட்டில் அதன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று நான் நம்புகிறேன், எனவே நிகழ்வைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கிறேன்.
இந்த நிகழ்வின் மீது உங்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், பொது மன்றங்களிலும், புதிய நாடாளுமன்றத்தின் சபையிலும் எழுப்பலாம். நம்மைப் பிரிப்பதை விட, நம்மை ஒன்றிணைப்பதே அதிகம் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முழு நாடும் இந்த நிகழ்வை எதிர்நோக்கி இருக்கிறது. உலகத்தின் கண்கள் நம்மீது உள்ளது. புதிய பாராளுமன்றத்தின் பதவியேற்பு நிகழ்வை தேசிய ஒருமைப்பாட்டின் சந்தர்ப்பமாக, நமது அரசியலாக ஆக்குவோம். கருத்து வேறுபாடுகள் ஒரு நாள் காத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.