பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் கொடுக்கப்போகும் ஸ்பெஷல் கிப்ட்..!!

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார்.
இதையடுத்து பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய், மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சுமார் 1500 மாணவர்களை ஜூன் இரண்டாவது வாரத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெற்றோரை இழந்த சூழ்நிலையிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர்களின் அடுத்தகட்ட படிப்பிற்கு தேவையான ஊக்கத்தொகையை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.