முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!!

திகார் சிறையின் குளியலறையில் தடுமாறி விழுந்த காரணத்தால் டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவக் காரணங்களுக்காக கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திகார் சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது,"சுமார் 6 மணியளவில் விசாரணைக் கைதியான சத்யேந்திர ஜெயின், சிஜே -7 மருத்துவமனையின் எம்ஐ அறையின் குளியலறையில் தடுமாறி விழுந்தார். பொதுவான பலவீனம் காரணமாக அவர் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களை அவரை பரிசோதித்தப்பின் உடல்நிலை இயல்யாக இருப்பதாக தெரிவித்தனர். சத்யேந்தர் தனக்கு முதுக்கு,இடது கால் மற்றும் தோளில் வலி இருப்பதாக கூறியதால் சிகிச்சைக்காக அவர் தீனதயாள் உபாத்யா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவொன்றில் உடல் மெலிந்த நிலையில் சத்யேந்திர ஜெயின் நாற்காலி ஒன்றில் அமர்ந்து இருக்கும் நிலையில் அருகில் இரண்டு காவலர்கள் நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனுடன் இந்தியில்,"அவருடைய உடல் நலத்திற்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
பாஜகவின் அடாவடி மற்றும் அராஜகத்தை டெல்லி மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒடுக்குமுறையாளர்களை கடவுள் கூட மன்னிக்கமாட்டார். இந்த போராட்டத்தில் மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். கடவுளும் எங்கள் பக்கம் இருக்கிறார். நாங்கள் பகத் சிங்கைப் பின்பற்றுபவர்கள், ஒடுக்குமுறை, அநீதி, சர்வாதிகாரத்திற்கு எதிரான எங்களின் பேராட்டம் தொடரும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.