நாளொரு நாடகம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் - அண்ணாமலை..!!

நாளொரு நாடகம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் - அண்ணாமலை..!!
X

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, திமுக ஆட்சியின் தொடர் தோல்விகளை மறைக்க, நாளொரு நாடகம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு ஆண்டு காலமாக, திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு நிறுவனங்களைப் புறக்கணித்து வரும் திமுக, தற்போது ஆரம்பித்திருக்கும் புதிய நாடகம் தமிழகத்தில் அமுல் நிறுவனம் வருவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதப்பட்ட கடிதமும் ஆவின் நிறுவனம் மீதான போலி அக்கறையும்.

அரசு ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகள் வழங்க, முதலில் தனியார் நிறுவனத்திடம் இருந்து இனிப்புப் பெட்டிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் இட்டிருந்த திமுகவின் இரட்டை வேடத்தை, தமிழக பாஜக முற்றிலும் அம்பலப்படுத்தியதால், வேறு வழியின்றி, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஆவின் நிறுவனத்திடம் இருந்தே இனிப்புகள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டாரா? பாலூட்டும் தாய்மார்களுக்கான சத்துணவு தொகுப்பு ஏலத்தில், சத்துப்பால் பொடி தயாரிக்க ஆவின் முன்வந்த போதிலும் அதை பரிசீலிக்காமல், தனியார் நிறுவனத்துக்குத் தாரை வார்த்ததை திமுக அரசு மறுக்க முடியுமா?

தமிழ்நாட்டில் தினமும் 244 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வது தினமும் 35 லட்சம் லிட்டர் மட்டுமே. அதாவது மாநிலத்தின் மொத்த பால் உற்பத்தியில், வெறும் 14% மட்டுமே, அரசு நிறுவனமான ஆவின் கொள்முதல் செய்கிறது. மேலும் 2021ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு சராசரி பால் கொள்முதல் 32 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாகப் புகார்கள் உள்ளன.

அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் சிறிதளவும் ஈடுபடாமல், திமுகவினர் நடத்தும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும். முதல்வர் ஸ்டாலின் மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தினசரி பால் கொள்முதலை அதிகரித்து, பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்படுத்துவதிலும் கவனத்தைச் செலுத்தாமல், வழக்கமான திசைதிருப்புதல் நாடகங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வரை தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

Next Story
Share it