நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை - பா.ரஞ்சித்..!
நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 79 நாடாளுமன்றத்தில் இரு அவைகளுக்கும் தலைவர் குடியரசுத் தலைவர். அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற அவைகளின் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவர். எனவே இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரண் எனக் குற்றஞ்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த முதல் ஜானதிபதியை புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க அழைக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், “நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை. சாதி பாகுபாடுகளை தீர்ப்பதற்கு பதிலாக, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் தீய வழக்கத்தை தொடர்கிறது. அரசியல் சட்டத்துக்கு ஜனநாயகத்துக்கும் விரோதமாக தொடர்ந்து பாஜக ஆட்சி செயல்பட்டுவருகிறது. விழுப்புரத்தில் திரௌபதி கோயிலில் தலித்துகள் நுழைவதை எதிர்த்து சாதி-இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் சாதியக் கொடுமைகள் பெருகிவருகின்றன. ” எனக் கருத்து பதிவிட்டுள்ளார்.