திமுகவின் முக்கிய நிர்வாகி சஸ்பெண்ட்!!
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பில், நெல்லை மத்திய மாவட்டச் செயலாளராக பணியாற்றி வரும் அப்துல் வகாப் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக மைதீன்கான் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படவுள்ளார். மற்றொரு அறிவிப்பில், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைமையின் இந்த அதிரடி நடவடிக்கையால் நிர்வாகள் பீதியில் உள்ளனர். சட்டமன்ற உறுப்பினராக உள்ள அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சியில் பணிகளை மேற்கொள்ள இடையூறு செய்து வருவதாக புகார்கள் வெளியாகின.
இந்நிலையில், அவர் திமுக மாவட்டச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் மைதீன்கான் நெல்லை மத்திய மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயரான மிசா பாண்டியன், மாநகராட்சி கவுன்சிலரை மிரட்டியதாக சில வாரங்களுக்கு முன்பாக புகார் எழுந்த நிலையில் அவர் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
newstm.in