வாகன ஓட்டிகளே உஷார்..! அபராதம் விதிக்கும் நடமாடும் வாகனம் சென்னையில் அறிமுகம்.!
சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. களத்தில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் கையடக்க கருவி மூலம்நேரடியாக அபராதம் விதிக்கின்றனர்.மேலும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் களப்பணியில் உள்ள போக்குவரத்து போலீஸார் விதி மீறல் வாகனஓட்டிகளை தங்களது செல்போனில்படம் பிடித்து, அதன் மூலமும் அபராதம் விதிக்கப்படுகிறது.
2022-ல்விபத்துகள் 11.84 சதவீதம் குறைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் விபத்து உயிரிழப்புகளும் 11.52 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு விதிமீறல் வாகன ஓட்டிகள் மீது எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கையே காரணம்.
இந்நிலையில், சென்னை போக்குவரத்து காவல் துறையில், ‘இடைமறிப்பான் (Interceptor)’ என்ற நவீன கேமராபொருத்தப்பட்ட வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே உள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சென்னையில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 360 டிகிரியில் சுழன்று படம் பிடிக்கும்அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் சுமார் 200 மீட்டர் தொலைவில் வரும் விதி மீறல்வாகனங்களை கூட துல்லியமாக படம்பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அதன் அடிப்டையில் கட்டுப்பாட்டறையில் இருந்தவாறே போலீஸார் அபராதம் விதிப்பார்கள்.
தேவைப்படும் இடங்களுக்கெல்லாம் இந்த வாகனங்களை கொண்டு சென்று நிறுத்தமுடியும். கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளை தெரிந்து கொண்டு சில வாகனஓட்டிகள் சாலை விதி மீறல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுப்பதோடு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களில் இந்த வாகனங்களை நிறுத்த முடியும். இதன் மூலம் சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீதான பிடி மேலும் இறுகுகிறது.